Saturday, January 09, 2010

இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி!

செங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது.

இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை.
 என்கிறார் செங்கொடி.  இதை இவர் ஏன் செய்கிறாராம்?  அதற்கும் அவரே பதிலளிக்கிறார்.
இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.
அதாவது, இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைந்து இருப்பதால்தான் இந்துப்பாசிச வெறிக்கு பலியாகிறார்களாம்.  இந்துப்பாசிச வெறியைத் தடுக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பைத் தகர்த்து விட வேண்டுமாம். 

அதாவது, 'மாமரத்தில் மாம்பழம் காய்த்துத் தொங்குவதால்தான் போக்கிரிப்பசங்க அதன் மேல் கல்லெறிகிறார்கள்.  எனவே, அவர்கள் கல்லெறிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மாமரத்தை வெட்டி விட வேண்டும்' என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் தோழர் செங்கொடி.

இது அவரது கட்டுரைத் தொடரின் 'நுழைவாயில்' பதிவில் கண்ட யோசனை.  தொடரின் மற்ற பதிவுகளிலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான யோசனைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கக் கூடும்.  படித்து விட்டு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

12 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சரியான பதில். நேரான பார்வை. மிக அருமையான பதிவு.
தொடருங்கள் உங்கள் பணியை.

செங்கொடி said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி திரு சலாவுதீன்

தேவைப்பட்டால் செங்கொடி தளத்திலேயோ அல்லது இங்கோ பதிலளிக்கிறேன்.

தோழமையுடன்
செங்கொடி

செங்கொடி said...

நண்பர் சலாவுதீன்,

உங்கள் மாம்பழ ஒப்பீடு பொருந்தாமல் நிற்கிறது. உவமையை விடுத்து உண்மைக்கு வருமாறு உங்களை அழைக்கிறேன்.

இந்து மதத்தை நீங்கள் எப்படி புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இஸ்லாமைப்போல், கிருஸ்துவத்தைப்போல் இந்துமதம் ஒரு மதமல்ல. அது அடக்குமுறைச்சட்டங்களின் தொகுப்பு. அதை ஒரு மதமாக காட்டுவதில் தான் இந்துத்துவாவின் பணியே அடங்கியிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு இந்து என்று யாரை வரையறுக்கிறது? யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிருஸ்து இல்லையோ, யார் பார்சி இல்லையோ அவரெல்லாம் இந்து. சமூகத்தளத்தில் இதை எப்படி நிர்வகிக்கிறார்கள்? ஒரு பொது எதிரியை காட்டுவதன் மூலமே சாத்தியப்படுத்தி வந்திருக்கிறார்கள் இதுவரை. சாங்கியம், சமணம், பௌத்தம் என்று எத்தனை மதங்களை, கொள்கைகளை இந்துத்துவா தின்று செரித்திருக்கிறது தெரியுமா? இந்த வரிசையில் புதிதாய் இஸ்லாம். மதக்கலவரங்களில் பார்ப்பான்கள் பங்கெடுத்திருப்பதை காட்டமுடியாது. ஆனால் யாரை அடக்கி நாயிலும் கீழாய் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் முன்னிற்கின்றனர். அடங்கியிருக்கவும் வேண்டும், அடியாளாகவும் சீறவேண்டும். அடக்கி மட்டுமே வைத்திருந்தால் ஒரு நேரம் அடங்க மறுப்பர். அடியாளாக மட்டுமே வைத்திருந்தால் சலுகைகள் கொடுக்க நேரிடும். இரண்டையும் சமன் செய்யத்தான் பொது எதிரி. இந்தியாவில் எங்கெல்லாம் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இந்துத்துவா ஆழமாக வேரோடியிருக்கிறது. இதை நீங்கள் இந்திய வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களை அனைத்திலும் வேறுபடுத்திக்காட்டி, வெளியிலிருந்து வந்தவர்களாக உருவகப்படுத்தி ஏனையவர்களை இந்துவாக ஒன்றினைக்கின்றார்கள். ஒரு எதிரி இல்லாமல் போனால் இந்து மதத்தால் நிலைத்திருக்க முடியாது. பாப்பானுக்கு எல்லோரும் அடிமை என்பதை எவ்வளவு நாளுக்கு மற்றவர்களை ஏற்கச்செய்யமுடியும்.

பார்ப்பனியத்திற்கு எதிரி இல்லாத காலம் என்று ஒன்று உண்டா வரலாற்றில்? காலகாலமாய் பார்ப்பனியம் உருவாக்கி வந்திருக்கும் எதிரிப்பாத்திரத்தை தற்போது இஸ்லாம் வகிக்கிறது. நீங்கள் மத ரீதியில் ஒன்றுபட்டிருக்கவேண்டியது இந்துத்துவாவிற்கு அவசியமாக இருக்கிறது.

இன்றிருக்கும் இஸ்லாமிய உணர்வு பாபர் பள்ளி இடிப்பிற்கு முன் முஸ்லிம்களிடம் ஏது? இன்றிருக்கும் அரசியல் வளர்ச்சி பாபர் பள்ளி இடிப்பிற்கு முன் இந்துக்களிடம் ஏது?

இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சியிலும் பார்ப்பனியமே கோலோச்சுகிறது. நாளை முஸ்லிம்களே அரசியல் உயர் பதவிகளில் வந்தாலும் பார்ப்பனியத்தை எதிர்த்து இஸ்லாத்திற்கு எதுவும் செய்துவிடமுடியாது. பிரதமர் முஸ்லிமாக இருந்தால் பாபர் பள்ளியை கட்டிவிட முடியுமா? குஜராத் கலவரத்திற்கு எதிராக கலாம் முச்சு கூட விடவில்லை.

இந்துத்துவா பார்ப்பனியத்தை மட்டும் காக்கவில்லை, உழைக்கும் மக்களுக்கு எதிராக உலகமயத்தையும் காத்து தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. இரண்டையும் அழிக்காமல் ஏழை முஸ்லிமும் கூட வாழமுடியாது.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் பலம் பெற்று விடுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இந்திய ரெட்டை ஆட்சிமுறையை ஒழிக்காமல் என்ன செய்துவிட முடியும் முஸ்லிம்களால்? உங்கள் அரசியல் ஆன்மீக தலைவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இந்திய ரெட்டை ஆட்சிமுறை குறித்து அவர்கள் கருத்தென்ன என்று? புலன்களை மூடிக்கொள்வார்கள்.

இவர்களை, இவைகளை எதிர்க்கும் போராட்டத்தில் முஸ்லிம்களும் இணையவேண்டியது காலத்தின்கட்டாயம், முஸ்லிம்களாக அல்ல, உழைக்கும் மக்களாய்.

முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றா? அன்றாடம் கால்வயிற்றுக் கஞ்சிக்கு ரிக்சா இழுக்கும் முஸ்லிமும், தினம் ஒரு காரில் பவனி வரும் முஸ்லிமும் ஒன்றா? பட்டினிச்சாவுகள் மலிந்த சோமாலியாவும், பகட்டில் மிதக்கும் சவுதியும் ஒன்றா?

உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணி அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். அவர்கள் உழைப்பைச்சுரண்டும் அனைவரும் எதிரணி அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். இந்த வர்க்க உணர்வு மேலோங்காதவரை வாழ்வில்லை யாருக்கும். உணர்ந்துகொள்ளுங்கள்.

தோழமையுடன்

செங்கொடி.

www.senkodi.wordpress.com

Salahuddin said...

நண்பர் செங்கொடி, உங்கள் பதிலுக்கு நன்றி.

நீங்கள் உங்கள் 'நுழைவாயில்' பதிவில் எழுதியிருந்ததையே சுருக்கமாக மாம்பழ உவமையுடன் குறிப்பிட்டிருந்தேன். அது உங்களுக்கு புரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது!

'சாங்கியம், சமணம், பௌத்தம் என்று எத்தனை மதங்களை, கொள்கைகளை தின்று செரித்த இந்துத்துவத்தின் தற்போதைய பொது எதிரி இஸ்லாம்' என்ற உங்கள் கூற்று ஒப்புக் கொள்ளக்கூடியது. தலித் மக்களை தாழ்த்தப் பட்டவர்களாவே வைத்திருந்தால்தான் உயர்குல இந்துக்கள் உயர்குலத்தவராகவே நீடிக்க முடியும். ஆனால் அவ்வாறான 'தாழ்த்தப்பட்ட' வாழ்க்கையை விரும்பாத, விழிப்புணர்வு பெற்ற தலித் மக்களுக்கு இஸ்லாம் ஒரு சிறந்த மாற்று வழியாக இருக்கிறது. 1981-ல் மீனாட்சிபுரம் என்ற ஊரைச் சேர்ந்த சுமார் 1250 தலித்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டது இந்துத்துவாக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதைத் தொடர்ந்து இன்றளவும் இதுபோன்ற மனமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. எனவேதான் இஸ்லாம் இந்துத்துவவாதிகளின் எதிரியாகி இருக்கிறது.

இதுவரை ஒழுங்காகவே புரிந்து வைத்திருக்கும் நீங்கள், இந்தச் சவாலை எதிர்கொள்ளச் சொல்லும் வழிமுறைதான் சற்றும் பொருத்தமேயில்லாததாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், எந்த இந்துத்துவாக்களை எதிர்ப்பதாக நீங்கள் சொல்கிறீர்களோ அதே இந்துத்துவாக்களின் பணியை இலகுபடுத்துவதாகவும் உங்கள் யோசனை அமைந்துள்ளது.

இந்துத்துவவாதிகளின் பொது எதிரியாக இஸ்லாம் இருப்பதால் அவர்களின் தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, இஸ்லாம் தனது தனித்தன்மையை இழந்துவிட வேண்டும் என்பது உங்கள் யோசனையாக இருக்கிறது. ரிக்ஷா இழுக்கும் முஸ்லிம்களும் சோமாலியாவின் முஸ்லிம்களும் தங்களது இஸ்லாமிய அடையாளத்தை புறக்கணித்துவிட்டு, சமத்துவ வாழ்வுரிமைக்காக ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கும் தலித் மக்களுடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கிறது. இந்துத்துவாக்களின் விருப்பமும் இதுதானே!

//பார்ப்பனியத்திற்கு எதிரி இல்லாத காலம் என்று ஒன்று உண்டா வரலாற்றில்? காலகாலமாய் பார்ப்பனியம் உருவாக்கி வந்திருக்கும் எதிரிப்பாத்திரத்தை தற்போது இஸ்லாம் வகிக்கிறது. நீங்கள் மத ரீதியில்
ஒன்றுபட்டிருக்கவேண்டியது இந்துத்துவாவிற்கு அவசியமாக இருக்கிறது.//

இஸ்லாம் மட்டுமல்ல, எந்தச் சமுதாயமாக இருந்தாலும் கொள்கை ரீதியில் ஒருங்கிணைந்திருப்பதே அச்சமுதாயத்திற்கு பலம் சேர்க்கும். அந்த சமுதாயத்தை எதிர்க்க விரும்புவோர் முதல் கட்டமாக அதன் ஒருங்கிணைப்பையே தகர்க்க விரும்புவர். இந்துத்துவாக்கள் இஸ்லாமியர்களிடம் நாடுவதும் அதேதான்.

இந்துத்துவாக்களை எதிர்ப்பதாகச் சொல்லும் நீங்கள் மறைமுகமாக அவர்களின் விருப்பம் நிறைவேற உழைக்கிறீர்கள் எனும்போது உங்கள் நோக்கமே சந்தேகத்திற்குரியதாகிறது. எனவே முதலில் உங்கள் நோக்கத்தை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

செங்கொடி said...

நண்பர் சலாவுதீன்,

உங்கள் பதிலில் இருக்கும் விளக்கம் உங்கள் புரிதலில் பிழை இருப்பதை காட்டுகிறது.

\\ மீனாட்சிபுரம் என்ற ஊரைச் சேர்ந்த சுமார் 1250 தலித்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டது இந்துத்துவாக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதைத் தொடர்ந்து இன்றளவும் இதுபோன்ற மனமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. எனவேதான் இஸ்லாம் இந்துத்துவவாதிகளின் எதிரியாகி இருக்கிறது.//

இது போன்ற மதமாற்றங்களினால் தான் இஸ்லாம் இந்துத்துவத்தின் எதிரியாகிவிட்டதாக நீங்கள் நினைப்பது உண்மையானால், காந்தியை கொன்ற கோட்சே ஏன் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொள்ளவேண்டும்? ஐந்து வேளை தொழுகை நடந்து கொண்டிருந்த பாபரியில் இரவோடிரவாக சிலையை வைக்க வேண்டிய காரணம் என்ன?ஆரியர் வருகை என்றும், இஸ்லாமிய படையெடுப்பு என்றும் வரலாற்றை பேதப்படுத்தியதன் பொருள் என்ன? இன்னும் பல எடுத்துக்காட்டுகளை கூற முடியும். என்றால் இஸ்லாத்துடனான இந்த்துவாக்களின் பகைமைக்கான காரணம் எது? இதை மதப்பகைமை என்றா புரிந்துகொள்வீர்கள்?

\\ எந்தச் சமுதாயமாக இருந்தாலும் கொள்கை ரீதியில் ஒருங்கிணைந்திருப்பதே அச்சமுதாயத்திற்கு பலம் சேர்க்கும். அந்த சமுதாயத்தை எதிர்க்க விரும்புவோர் முதல் கட்டமாக அதன் ஒருங்கிணைப்பையே தகர்க்க விரும்புவர். இந்துத்துவாக்கள் இஸ்லாமியர்களிடம் நாடுவதும் அதேதான். //

இந்துத்துவாக்கள் இஸ்லாமியரிடையே பிளவை விரும்பினால் சுலபமாக அதை செய்திருக்க முடியும். அரசு ரீதியில் ஒரு பிரிவை ஆதரித்தால் இஸ்லாமிய சமுதாயம் சுலபமாக பிளவுபடும். இதை இந்துப்பாசிசங்கள் செய்தார்கள் என்று ஒரு எடுத்துக்காட்டு கூறமுடியுமா உங்களால்? முஸ்லிம்களின் தனி நாடு கோரிக்கை முஸ்லிம்களிடமிருந்து தொடங்கவில்லை, சாவர்கர் தான் முதலில் எழுப்புகிறார் இதை. மிக தந்திரமாக இந்திய முஸ்லிம்களின் பலத்தை குறைத்துவிட்டு பின் அவர்களை ஒருமைப்படுத்துகிறார்கள். சிந்தித்துப்பாருங்கள், பாகிஸ்தான் பிரிவினையை செய்யாமல் முஸ்லிம்களை ஒருமைப்படுத்தினால் முஸ்லிம்கள் அளட்சியப்படுத்தமுடியாத பெரும்பான்மையில் இருந்திருப்பார்கள். தந்திரமாக ஒருபகுதியினரை தனிநாடு என்று அப்புறப்படுத்திவிட்டு பின் தங்கள் நோக்கத்தை செயல்படுத்துகிறார்கள். தீவிரவாத பிரச்சனையை சொல்லி இஸ்லாமியரில் தீவிரவாதிகள் என்றும் நல்லகுடிகள் என்றும் இஸ்லாமியரை பிரித்திருக்க முடியாதா பார்ப்பனியத்தினால். ஆனால் மிகக்கவனமாக ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் தீவிரவாதமாக சித்தரித்தார்கள். ஏன்? அவர்களின் எந்த நடவடிக்கையை கொண்டு முஸ்லிம்களை பிரிக்க முயல்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்?

\\ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கும் தலித் மக்களுடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கிறது. இந்துத்துவாக்களின் விருப்பமும் இதுதானே!//

இல்லை. இந்துத்துவாக்களின் விருப்பம் அதுவல்ல. அதுவாக இருந்திருந்தால், தாழ்த்தப்பட்டமக்களிடம் நீங்கள் மீசை வைக்கிறீர்கள் அவர்கள் மீசை எடுக்கிறார்கள். நீங்கள் தாடி எடுக்கிறீர்கள் அவர்கள் தாடி வைக்கிறீர்கள் என்று பாமர மக்களிடம் பிரிவினையை தூண்டியிருக்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்களும் முஸ்லிம்களும் இணையவேண்டும் என விரும்பியிருந்தால் மீனாட்சிபுரத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். எதிர்க்கமாட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் தாழ்த்தப்பட்டவர்களை பயன்படுத்துவதிளிருந்தே தெரியவில்லையா? அவர்களிடையே பிரிவையே விரும்புகிறார்கள் என்பது. வேசிமகன்கள் என்று தெய்வத்தின்குரல் எழுதிய சங்கராச்சாரிகள் சேரிகளில் சென்று நீங்களும் இந்து தான் என்று சொல்வதேன்?

\\இந்துத்துவாக்களை எதிர்ப்பதாகச் சொல்லும் நீங்கள் மறைமுகமாக அவர்களின் விருப்பம் நிறைவேற உழைக்கிறீர்கள் எனும்போது உங்கள் நோக்கமே சந்தேகத்திற்குரியதாகிறது.//

உங்களை நீங்களே பரிசீலனை செய்துபார்த்துக்கொள்ளுங்கள் எது உண்மை என்று? மாறாக மதம் பிடித்து மதம் தான் எல்லாமும் என்றிருந்தீர்களானால் நிச்சயம் உங்களால் உண்மையை அடையமுடியாது.

தோழமையுடன்

செங்கொடி.

www.senkodi.wordpress.com

பின்குறிப்பு: உடனுக்குடன் என்னால் பதில் எழுத முடியாமல் போகலாம் வேலைப்பழுவினால். என்றாலும் உங்களின், உங்கள் வாசகர்களின் புரிதலுக்கு முயல்வேன்.

Salahuddin said...

உங்கள் பதிலுக்கு நன்றி நண்பர் செங்கொடி.

//உங்கள் பதிலில் இருக்கும் விளக்கம் உங்கள் புரிதலில் பிழை இருப்பதை காட்டுகிறது.//

மன்னிக்கவும்.. பிழை இருப்பது உங்கள் புரிதலில்தான் என்பதை ஏற்கனவே நான் சில பதிவுகளில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

//இஸ்லாத்துடனான இந்த்துவாக்களின் பகைமைக்கான காரணம் எது? இதை மதப்பகைமை என்றா புரிந்துகொள்வீர்கள்?//

இந்துத்துவாக்களின் பகைமைக்கான காரணத்தை 'மதப்பகைமை' என்ற ஒரே வார்த்தையில் அடக்கிவிட முடியாது. வேறுபல காரணங்களும் இருப்பதை நான் மறுக்கவில்லை.

இந்துத்துவாக்களின் பகைமையோ, அதை அவர்கள் எந்த வடிவிலெல்லாம் செயல்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் இங்கு விவாதப் பொருள் அல்ல; மாறாக, இந்துத்துவாக்கள் இஸ்லாமை தாக்குகிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி, சந்தடி சாக்கில் உங்கள் வர்க்கப் போராட்டத்திற்கு இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஆள் சேர்க்க முனைகிறீர்களல்லவா, அதுதான் விவாதப் பொருள்.

//உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணி அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். அவர்கள் உழைப்பைச்சுரண்டும் அனைவரும் எதிரணி அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். இந்த வர்க்க உணர்வு மேலோங்காதவரை வாழ்வில்லை யாருக்கும். உணர்ந்துகொள்ளுங்கள்.//

உங்கள் இஸ்லாமிய வெறுப்புணர்வை சற்று ஒதுக்கிவிட்டு இந்த 'வர்க்க உணர்வு' 'வர்க்கப் போராட்டம்' ஆகியவற்றைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?

நீங்கள் ஆசைப்பட்டபடியே உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணி அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். அவர்கள் உழைப்பைச்சுரண்டும் அனைவரும் எதிரணி என்று பிரிந்து நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதாவது, முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய அடையாளத்தை புறக்கணித்து 'உழைப்பாளர் சாதி' 'சுரண்டுவோர் சாதி' என இரண்டு புதிய சாதிகளில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். அப்படித்தானே? வர்க்கம் என்பதும் சாதி என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதானே?

சரி, அப்படியே நிகழ்ந்ததாக வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு சாதியினரும் ஒருவரோடு ஒருவர் முட்டிக் கொண்டு நின்றால் (உங்கள் வார்த்தையில் சொல்வதானால் 'வர்க்கப் போராட்டம்') முதலீட்டாளர்கள், அதாவது 'உழைப்பைச் சுரண்டுவோர்' இல்லாமல் 'உழைக்கும் வர்க்கத்'திற்கு யார் வேலை கொடுப்பார்கள்? அரசாங்கம் கொடுக்கும் என்கிறீர்களா?

சரி.. அப்படியே ஆகட்டும்.. சுரண்டும் வர்க்கத்தை மொத்தமாக ஒழித்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 'அரசாங்கம்' என்ற பூதாகரமான முதலாளித்துவ அமைப்பு அங்கே உருவாகியிருக்கும். பரவாயில்லையா?

சரி.. அதுவும் நிகழ்ந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம். இப்போது 'உழைக்கும் சாதி' தன்னிறைவு பெற்ற சமுதாயமாக மாறி இருக்குமா? இருக்காது!

அரசாங்கப் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் குறுநில மன்னர்களைப் போல ஆகியிருப்பார்கள்! ஒழிக்கப் பட்டு விட்ட 'சுரண்டும் சாதி'யின் புதிய பிரதிநிதிகளாக இவர்கள் வலம் வருவர்கள்.

'உழைக்கும் சாதி'? அவர்கள் மீண்டும் 'வர்க்க உணர்வை' புதுப்பித்து அடுத்த 'வர்க்கப் போராட்டத்'திற்காக தயாராகிக் கொண்டிருப்பார்கள்.

இப்போது புரிகிறதா நண்பரே, நீங்கள் இல்லாத ஊருக்கு வழி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று?

//மதம் பிடித்து மதம் தான் எல்லாமும் என்றிருந்தீர்களானால் நிச்சயம் உங்களால் உண்மையை அடையமுடியாது.// என்று எங்களுக்கு அறிவுரை சொல்லும் நீங்கள்,
//உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு.//
என்ற மாயையில் சிக்குண்டு கிடக்கிறீர்களே நண்பரே.

நடுநிலைக் கண்ணோடு பார்த்தீர்களென்றால், மேற்கண்ட பிரச்னைகள் மட்டுமல்லாது மாக்சியம் தோற்றுவிக்கும் பிரச்னைகளுக்குக்கூட இஸ்லாம் தீர்வு வழங்குவதை காண்பீர்கள். உங்கள் நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.

செங்கொடி said...

நண்பர் சலாவுதீன்,

\\அதாவது, இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைந்து இருப்பதால்தான் இந்துப்பாசிச வெறிக்கு பலியாகிறார்களாம். இந்துப்பாசிச வெறியைத் தடுக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பைத் தகர்த்து விட வேண்டுமாம்.

அதாவது, 'மாமரத்தில் மாம்பழம் காய்த்துத் தொங்குவதால்தான் போக்கிரிப்பசங்க அதன் மேல் கல்லெறிகிறார்கள். எனவே, அவர்கள் கல்லெறிவதைத் தடுக்க வேண்டுமென்றால் மாமரத்தை வெட்டி விட வேண்டும்' என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் தோழர் செங்கொடி.//

உங்கள் கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருப்பது நீங்கள் தானே? இங்கிருந்து தானே நம் உரையாடல் தொடங்கியது. இதற்கு பதிலளிக்கும் முகமாகத்தான் நான் என்னுடைய பின்னூட்டத்தில் விவரங்களை குறிப்பிட்டிருந்தேன். இதை நீங்கள் மறுத்து இந்துக்கள் முஸ்லிம்களின் பிரிவையே உண்டாக்க முனைவதாக உங்களின் மறுமொழியில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு என்னுடைய அடுத்த பின்னூட்டத்தில் நீங்கள் கூறுவது பிழையானது என்று நிருவியிருந்தேன்.

இதை மறுக்க முடியாத நீங்கள் \\ இந்துத்துவாக்களின் பகைமையோ, அதை அவர்கள் எந்த வடிவிலெல்லாம் செயல்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் இங்கு விவாதப் பொருள் அல்ல; மாறாக, இந்துத்துவாக்கள் இஸ்லாமை தாக்குகிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி, சந்தடி சாக்கில் உங்கள் வர்க்கப் போராட்டத்திற்கு இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஆள் சேர்க்க முனைகிறீர்களல்லவா, அதுதான் விவாதப் பொருள்.// என்று இப்போது தடம் மாறி இருக்கிறீர்கள்.

கம்யுனிசம் பற்றிய உங்களின் ஊக படிநிலைகளுக்கு பதிலளிக்குமுன் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்ளலாமா?

நம்முடைய தொடர் உரையாடலுக்கு எதை கருவாக கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கூறுங்கள். அது எதுவாக இருந்தாலும் இஸ்லாமிய ஒருங்கிணைவு தவறு என்பது குறித்ததாக இருந்தாலும், கம்யுனிச சாரம் குறித்ததாக இருந்தாலும் சரி. எது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் பின் உரையாடலாம்.

தோழமையுடன்,

செங்கொடி.
www.senkodi.wordpress.com

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஓஹோ..! ''எழுத்து விவாதம்'' என்றால் இதுதானா? இப்படித்தான் போகுமா? உங்கள் அந்தர் பல்டிகள் ரொம்ப நன்றாக இருக்கிறது செங்கொடி! தேவை இல்லாமல் விவாதத்தை திசைதிருப்பி எங்கெங்கோ இழுத்துச்சென்று முட்டி மோதி கடைசியில் 'இல்லாத ஊருக்கு வழி சொல்கிறார்' என்று தெளிவாக தெரிந்த பின்னர், 'விவாத தலைப்பு என்ன?' என்று கேட்பது.... உங்களுக்கே நல்லாஇருக்கா செங்கொடி?

Salahuddin said...

நண்பர் செங்கொடி,

ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடலாம். இந்துத்துவாக்கள் என்ன காரணத்திற்காக இஸ்லாமை எதிர்க்கிறார்கள் என்பதை விளக்குவதற்காகவா நீங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை அல்லவா?

'இஸ்லாமியக் கொள்கைகள் தவறானவை' என்று நிரூபிப்பதுதான் உங்கள் நோக்கம் என்பதை உங்களின் பதிவுகளின் மூலமாக புரிந்து வைத்திருக்கிறேன். இதுதான் கரு. இந்துப் பாசிசம், வர்க்கப் போராட்டம் என்பதெல்லாம் உப கதைகள். நாம் கிளைக் கதைகளைத் தவிர்த்து கருவைப் பற்றி விவாதிப்போமே!

//நம்முடைய தொடர் உரையாடலுக்கு எதை கருவாக கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கூறுங்கள். அது எதுவாக இருந்தாலும் இஸ்லாமிய ஒருங்கிணைவு தவறு என்பது குறித்ததாக இருந்தாலும், கம்யுனிச சாரம் குறித்ததாக இருந்தாலும் சரி. எது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் பின் உரையாடலாம்.//

இன்ஷா அல்லாஹ், நாம் அடிப்படையிலிருந்தே தொடங்கலாம்.

மனிதர்களாகிய நாமும், நாம் வாழும் இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டவை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று.

இந்த விஷயத்தில் நீங்கள் உடன்படுகிறீர்களென்றால் நாம் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். இல்லையெனில், உங்கள் கொள்கைப்படி இந்த உலகம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆதாரங்களுடன் விளக்குங்கள்.

செங்கொடி said...

நண்பர் சலாவுதீன்,

உங்கள் புரிதலுக்கும் நகர்தலுக்கும் நன்றி.

கிளைகளை விட்டுவிட்டு கருவுக்கு வந்திருக்கும் நீங்கள் முதலிலேயே அவ்வாறு கருவுக்கு வந்திருக்கலாம். இந்துப்பாசிசங்களின் திட்டங்கள் குறித்து பக்கம் பக்கமாக விளக்குவதற்கு அவசியமில்லாமல், இஸ்லாம் உள்ளிட்ட மதங்களின் தவறான உள்ளீடுகளை தெளிவுபடுத்துவதற்க்கான காரணத்தை நீங்கள் எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு நீங்கள் எடுத்துக்கொண்டதாலும் பின்னர் அதிலிருந்து விலகி வேறொரு தலைப்பை முன்வைத்ததாலுமே என்னுடைய விளக்கங்களும் உரையாடற்தலைப்பு குறித்த தெரிவும் அவசியம் என்றானது. பரவாயில்லை இப்போது மையத்திற்கு நகர்ந்துவிட்டோம்.

உங்கள் அடிப்படை நம்பிக்கையை தகர்ப்பதற்குத்தான் நான் தொடராக எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். \\'இஸ்லாமியக் கொள்கைகள் தவறானவை' என்று நிரூபிப்பதுதான் உங்கள் நோக்கம் என்பதை உங்களின் பதிவுகளின் மூலமாக புரிந்து வைத்திருக்கிறேன்.// எனவே மீண்டும் அவற்றை இங்கு புதிதாக தொடங்க வேண்டிய தேவையில்லை எனக்கருதுகிறேன். ஆகவே, என்னுடைய தொடரின் முதலிரண்டு பகுதிகளான நுழைவு வாயில், அறிமுகம் ஆகியவற்றை விட்டு(ஏற்கனவே நீங்கள் எழுதியும் விட்டீர்கள்) மூன்றாவது பகுதியிலிருந்து உங்கள் மறுப்புரையை தொடங்கலாம். நான் இந்த தளத்திற்கு வந்தே வேண்டிய விளக்கங்களை தருகிறேன்.

தோழமையுடன்,
செங்கொடி.
www.senkodi.wordpress.com

Salahuddin said...

சகோ. முஸ்தபா, விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப் படுத்துங்கள்.. நன்றி.

aaa said...

இஸ்லாத்தை சில புல்லுருவிகள் விமர்சிக்கும் அளவுக்கு விமர்சிக்கட்டும்,அறிவுள்ளவர்கள் அதை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் மேற்க்கத்திய நாடுகளில் இஸ்லாத்தை ஏற்கும் பெண்களினதும்,ஆண்களினதும் எண்ணிக்கை மிகவேகமாக செல்கிறது "அல்லாஹு அக்பர்".

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...