Tuesday, February 15, 2005

ஹதீஸ் ஒரு சிறு விளக்கம் - 2: தபகாத் இப்னு ஸஃது

திண்ணையில் வெளியான எனது முந்திய ஹதீஸ் பற்றிய கடிதத்தை ‘குழப்பவாதம்’ என்றும் ‘திசை திருப்பும் முயற்சி’ என்றும் தனது 27.1.05 பதிவில் குற்றம் சாட்டிய நேசகுமார், அதே பதிவில் ‘ஹதீதுகளைப்பற்றி சொல்லியிருக்கும் சலாஹ¤தீன் தபகாத் பற்றியும் கொஞ்சம் ஆய்ந்து எழுதியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களை கலந்தாலோசித்து திரட்டிய தகவல்களை இங்கு முன்வைக்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாக தொகுக்கும் பணி தொடங்கியது. நபிகளார் அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் அறிவிக்கப்படும்போது அவ்வசனங்களை எழுத்து வடிவத்தில் அவ்வப்போது குறித்து வைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஹதீஸ்களையும் எழுத்து வடிவத்தில் குறித்து வைத்தால் வீணான குழப்பம் ஏற்படும் என்பதால் ஹதீஸ்களை பதிவு செய்வதை நபிகளார் தடை செய்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அபூபக்கர், உமர், ஆகிய கலிபாக்களின் ஆட்சிக்காலத்திற்கும் பிறகு, கலிபா உமறுப்னு அப்தில் அஜீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவரது உத்தரவின்பேரில் அபூபக்கரிப்னு ஹஜ்ம் என்ற அறிஞர் அவர் அறிந்திருந்த ஹதீஸ்களை தொகுத்து ஒரு கிரந்தம் எழுதினார். இக்கிரந்தத்தை தொடர்ந்தே வேறு சில மார்க்க அறிஞர்களும் தங்களுக்கு தெரிந்த இதர ஹதீஸ்களையும் எழுத ஆரம்பித்தனர். இவ்வாறுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்கியது.


இவ்வாறு தொகுக்கப்பட்ட கிரந்தங்களில், நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் ஆகியவைகள் மட்டுமில்லாமல், ஸஹாபிகள் எனப்படும் நபித்தோழர்களின் சொல் செயல் ஆகியவைகளும், அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் மார்க்கத் தீர்ப்புகளும் கலந்திருந்தன. தாபியீன்கள் நபிகளாரின் காலத்தில் பிறந்தே இருக்காத தலைமுறையினர். இவர்கள் ஸஹாபிகளிடமிருந்து மார்க்கத்தை கற்றவர்கள்.

இந்த காலக்கட்டத்திலிருந்தே பொய்யான ஹதீஸ்களை கூறுபவர்களும் தோன்றிவிட்டார்கள். அதிகமான ஹதீஸ்களை அறிந்து அறிவிக்கும் மார்க்க அறிஞர்களை மக்கள் பெரிதும் மதித்தனர். அத்தகைய மதிப்பு தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை காணப்பிடிக்காமல் அது வளரும் வேகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் போன்ற காரணங்களினாலும், பொய்யான ஹதீஸ்களை புனைந்து மக்களிடையே இவர்கள் பரப்பத்தொடங்கினர்.

தபகாத் இப்னு ஸஃது தொகுக்கப்பட்ட காலத்தில் இவ்வகை கற்பனை ஹதீஸ்கள் நிறைய பரப்பப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. இதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு (ஹிஜ்ரி 194-ல்) தோன்றிய இமாம் புகாரி அவர்களின் காலத்திலும் இவர்களுக்கு பின் தோன்றிய மற்ற ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலத்திலும்தான் ஹதீஸ்களை ஆய்ந்து, தரம் பிரித்து, ஆதாரமானவைகளை இனங்கண்டு தொகுக்கும் பணி நடந்து வந்தது.

தபகாத் இப்னு ஸஃது பற்றியும், இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள, நேசகுமார் ஆதாரமாக காட்டும் நிகழ்வு பற்றியும் இனி சில ஆதாரங்களை காண்போம்.

ஹதீஸ்கலையின் பெரிய இமாம்களில் ஒருவரான இப்னுஸ்ஸலாஹ், இப்னு ஸஃது பற்றியும் அவரது தபகாத் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

"இப்னு ஸஃது நம்பகமானவராக இருந்தாலும் அவர் தனது "தபகாத்"தில் பலவீனமான அறிவிப்பாளர்கள் வாயிலாக அதிகமான செய்திகளை அறிவித்துள்ளார். அத்தகைய பலவீனமான அறிவிப்பாளர்களில் முஹம்மத் பின் உமரும் ஒருவர்" (1)

இந்தக் கதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு யாரும் ஆதாரம் தரவில்லை என்கிறார் நேசகுமார். அப்படி கூறுவது தவறான வாதமாகும். நிறைய ஆதாரங்கள் உண்டு.

முதலில், இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை:

1) முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான்
அவரிடமிருந்து
2) அப்துல்லாஹ் பின் ஆமிர்
அவரிடமிருந்து
3) முஹம்மது பின் உமர்
அவரிடமிருந்து
4) இப்னு ஸஃது

இந்த அறிவிப்பாளர் வரிசைப்படி நபி(ஸல்) அவர்கள் இப்படி நடந்துகொண்டதாக சொல்பவர், முஹம்மத் பின் யஹ்யா பின் ஹப்பான். இவர் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறக்கவே இல்லை. இவர் நபியின் மரணத்திற்கு பல்லாண்டுகளுக்குப் பின் பிறந்த ஒரு தாபிஈ ஆவார். ஒரு தாபிஈ, நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள், இப்படிச் சொன்னார்கள் என்று அறிவிக்கும் எந்தச் செய்தியும் ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் ஒப்புக்கொள்ளப்படாத செய்தியாகும்.

இந்தக் குறை மட்டுமல்ல, இதைவிட பெரிய குறை, இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஆமிர், ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளமல் விடப்பட்டவர்) என்று வர்ணிக்கப்பட்டவர். (2)

அடுத்து, மூன்றாவது அறிவிப்பாளர், முஹம்மத் பின் உமர்; இவரும் ஹதீஸ் கலை அறிஞர்களால், மத்ரூத் (ஏற்றுக்கொள்ளாமல் விடப்பட்டவர்) என்று அறிவிக்கப்பட்டவர் ஆவார். (3)

ஆக இந்தச் செய்தி பலவீனத்துக்கு மேல் பலவீனமானது என்பது தெளிவாகிறது.

இந்தச் செய்தி தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கவுரை) நூற்களில் வந்துள்ளதே என நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். அப்படியானால் குர்ஆன் விளக்கவுரையாளர்களின் தலைவர் என அறியப்படும் இமாம் இப்னு கஸீர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

திருக்குர்ஆனின் 32:37-வது வசனத்திற்கு கீழ் இமாம் இப்னு கஸீர் கூறுவது: "இப்னு அபீஹாத்தமும், தபரீயும் இவ்விடத்தில் சில செய்திகளை குறிப்பிடுகிறார்கள். அவை ஆதாரமில்லாதவையாதலால், அச்செய்திகளை நாம் புறக்கணிக்கவே விரும்புகிறோம். ஆதலால் அவற்றை இங்கு நாம் கொண்டுவரவில்லை".

மேலும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது "ஜாதுல் மஸீர்" என்ற பிரபலமான திருக்குர்ஆன் விளக்கவுரையில், 32:37-வது வசனத்தின் விளக்கப்பகுதியில் மேற்படி கதையை சுட்டிக்காட்டி, இந்தக்கதையை மறுத்து விளக்கமளித்துள்ள அறிஞர்களின் விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார். இப்னுல் ஜவ்ஸீ, இப்னு கஸீரைவிட காலத்தால் முந்தியவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அடுத்து ஹதீஸ் கலை மேதை இப்னு ஹஜர், ஸஹீஹுல் புகாரியின் விளக்கவுரையில், 32:37-வது வசனத்திற்கு விளக்கமாக இடம்பெறும் ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது, "இப்னு அபிஹாத்தமும், தபரீயும் வேறு செய்திகளை (அதாவது மேற்படி கதைகளை) குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றை பல குர்ஆன் விரிவுரையாளர்கள் நகல் செய்துள்ளார்கள். அந்தச் செய்திகளை பேசுவதில் ஈடுபடுவதே வெறுக்கத்தக்கது” என்று கூறுகிறார்.

இப்படி ஹதீஸ்கலை அறிஞர்களாலும், குர்ஆன் விளக்கவுரையாளர்களாலும், இந்தக் கதை கட்டுக்கதைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

அதனால்தான் 'ரஹீக்' நூலின் ஆசிரியர், ஆதாரம் எழுதாமல் ‘கட்டுக்கதை' என்று மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். தவிர யாருக்கும் பயந்துக்கொண்டு எதையும் அவர் மறைக்கவில்லை.

எனவே, நேசகுமார் இனி ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், அவற்றையே ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புத்தகங்களையும், இவற்றை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட இணையத்தளங்களையும் படித்து தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மற்றபடி, நான் முன்பே சொல்லியதுபோல, நேசகுமாரின் கேள்விகள் என்னைப்போன்ற முஸ்லிம்களை ப்ல மார்க்க நூற்களை ஆழ்ந்து படிக்கவும், மார்க்க அறிஞர்களுடன் கலந்தாலோசிக்கவும், அறியாத பல விஷயங்களை அறிந்து கொள்ளவும் தூண்டுகிறது. எனவே, ஆதாரங்களின் அடிப்படையிலான பல கேள்விகளை நேசகுமார் தொடர்ந்து எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரைக்கான ஆதாரங்களை திரட்டி உதவிய சகோதரர்களுக்கு எனது நன்றிகள்!

- சலாஹ¤த்தீன் - 15 பிப்ரவரி 05

Reference books:

(1) இப்னுஸ்ஸலாஹ், நூல்: அல் முகத்திமா ஃபீ உலூமில் ஹதீஸ், பக்கம் 369, பதிப்பு தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(2) தஹ்தீபுத் தஹ்தீப், பக்கம் 245, பதிப்பு- தாருல் குத்துப் அல் இல்மிய்யா

(3) தக்ரீபுத் தஹ்தீப், பக்கம் 555, பதிப்பு- பைத்துல் அஃப்கார்.

(4) முஹம்மது அப்துல் காதர் ஸாஹிபு பாக்கவி (ரஹ்), நூல்: தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி தமிழ் மொழிபெயர்ப்பு பாகம்-1, பதிப்பு - இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிஷர்ஸ் & புக் செல்லர்ஸ்

Friday, February 11, 2005

இயற்கையின் சீற்றம்! இறை சித்தமா?

கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய தமிழ் மாத இதழான ‘நம்பிக்கை’ பிப்ரவரி 05 இதழில் வெளியான தலையங்கம்.

சுனாமி.

நமது அகராதியில் புதிதாக புகுந்துவிட்ட ஒரு சொல்.நில நடுக்கத்தால் உருவாகும் கடல் பிரளயத்தை உணர்த்தும் ஜப்பானிய வார்த்தை. உச்சரிப்பில் ஆபத்தை நுகர முடியவில்லை. அனுபவம் அவ்வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் கதிகலங்க வைக்கிறது.

இந்தியப் பெருங்கடல் வட்டத்திற்குட்பட்ட நாடுகளின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புப் பேரிடர் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆங்காங்கே மக்கள் தொடர்ந்து பட்டு வரும் அவதிகளுக்கு வரலாற்றில் முன்னுதாரணம் ஏதுமில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தில் வீசப்பட்ட அணுகுண்டுகளில் பலியான மக்கள் ஹிரோஷிமா - நாகசாகி என்ற இரு நகரங்களில் வசித்தவர்களே. அதிலும் பாதிப்பு ஒரு நாட்டின் ஒரு பகுதியைத்தான் உள்ளடக்கியது. பல நூறு அணுகுண்டுகளின் தாக்கத்தை இரு கண்டங்களின் பல நாடுகளை பேதமின்றி இந்த சுனாமி ஏற்படுத்தியுள்ளது. இப்பேரிடருக்கு விஞ்ஞான அடிப்படையில் காரணம் கூறியுள்ளனர்.

பூமி ஒரு கோள். அதன் மேல்பரப்பு குளிர்ந்துவிட்ட தட்டுகளால் ஆனது. மையம் ‘லாவா’ எனும் வெப்பக் குழம்பினாலானது. மையப்பகுதியில் வெப்பத்தினால் அழுத்தம் கூடும்போது ஏற்படும் வெடிப்பு, பூகம்பமாக - எரிமலை குமுறலாக மேல்மட்டத்திற்கு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூமியின் மேல் தகடுகள் உராய்கின்றன. அதனால், ஆழ்கடல் அலைகள் உருவெடுக்கின்றன; வெகுண்டெழுந்து ‘சுனாமி’யாக பேரழிவை ஏற்படுத்துகிறது.

இன்னொரு பார்வையில், நிகழ்ந்துள்ள பேரிடர் ஒரு சாபக்கேடு என்றும், இறைவனின் கோபப்பார்வை என்றும் சித்தரித்துள்ளனர். ‘பலா’ - தண்டனை இறக்கப்பட்டுவிட்டது என்ற விளக்கத்தையும் தந்துள்ளனர்.

‘காக்கும் கடவுளே அழிவைத்தந்துவிட்டான்’ எனும் அங்கலாய்ப்பும் சேர்ந்துள்ளது. அவநம்பிக்கையில் இறைமறுப்பும் ஒரு சாராரிடம் உருவெடுத்துள்ளது.

‘அவனின்றி ஓர் அணுவும் அசையா’ என்ற கோட்பாட்டில் இயற்கை தரும் வளங்களும் நலன்களும் அதன் சீற்றமும் துன்புறுத்தலும் இறை கட்டளைகளுக்கு உட்பட்டதே.

ஆனால் ‘இறைவன் பழிவாங்கிவிட்டான்!’ என்ற கூற்று இஸ்லாத்திற்கு உடன்பாடற்ற கொள்கை. படைக்கப்பட்ட அனைத்தும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட நியதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. பேரிடர், பெருநஷ்டம், இழப்பு ஏற்பட்டால் அவை இறையச்சத்தின் அடையாளங்களாக முஸ்லிம்கள் கருத வேண்டும். நம்பிக்கை வலுப்பெற்று, வாழ்க்கையை திருத்தி அமைக்க வகை செய்ய வேண்டும்.

அவதியுறும் மக்களின் துயர்துடைப்பிற்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. இவ்விஷயத்தில் சமுதாயப்பற்று முஸ்லிம் சமூகத்துடன் நின்று விடக்கூடாது. மனித நேயத்தின் முழு வீச்சும் முஸ்லிம்களிடம் பிரதிபலிக்க வேண்டும். இன மத பேதமின்றி உதவிகளை வாரி வழங்க வேண்டும்.

‘நம்பிக்கை’ இதழைப்பற்றி..

மலேஷிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’, கடந்த 9 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அனேகமாக, கிழக்காசிய வட்டாரத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இஸ்லாமிய தமிழ் இதழ் இதுவாகத்தான் இருக்கும். தலையங்கம், நேர்காணல், ஆளுமை, சிந்தனைத்துளி போன்ற தலைப்புகளில் பயனுள்ள கட்டுரைகளும், சிறுகதைகள், கவிதைகளும் தாங்கி இந்த இதழ் வந்து கொண்டிருக்கிறது.

முகவரி:

Nambikkai
YPI Publication
Lot 44025, Jalan PJS 10/11
Bandar Sri Subang
46000 Petaling Jaya
Selangor Darul Ehsan
Malaysia

Tel: 6 03 5631 4802
Fax: 6 03 5632 8025


- சலாஹ¤த்தீன் - 11 பிப்ரவரி 05

Tuesday, February 08, 2005

நேசகுமாரின் விளக்கங்களுக்கு பதில்!

நபிகள் நாயகம் - அன்னை ஜைனப் திருமணம் குறித்து நேசகுமார் தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். இந்த நீண்ட கடிதம் எழுதும்முன் எனது முந்திய திண்ணை கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருக்கலாம். இந்த விவாதத்தில் அவர் தரப்பு வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கின்றன. பொய்யை உண்மை என்று வாதிடுபவர்களுக்குத்தான் அதற்கான ஆதாரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. மாறாக, பொய்யை 'பொய்தான்' என்று சொல்வதற்கும் ஆதாரம் கேட்கிறார் நேசகுமார். நாம் அதற்கும் தயார்!

1. //ஹதீஸ்களிலும் தப்ஸீர் புத்தகங்களிலுமே இந்த 'கட்டுக்கதை' காணக்கிடைக்கிறது எனும்போது, எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்ற வாதத்தின் அடிப்படையே தகர்ந்து போகிறது.// என்கிறார் நேசகுமார். எனது முந்திய கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. இங்கு விவாதம் எது ஹதீஸ், எது ஹதீஸ் இல்லை என்பதல்ல. எது ஸஹீஹ் (ஆதாரபூர்வமான) ஹதீஸ், எது ஸஹீஹ் அல்ல என்பதுதான். இதை தெளிவுபடுத்துவதற்காகவே ஹதீஸ் பற்றிய சிறு விளக்கத்தை அளித்திருந்தேன். அது குழப்பவாதமோ, திசைதிருப்பும் முயற்சியோ அல்ல. (இந்த விவாதத்தில் ஷியாக்களைப் பற்றி நேசகுமார் பேச ஆரம்பிப்பதுதான் தெளிவான திசை திருப்பும் முயற்சி!)

2. ஒரு ஹதீஸ் ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு அதன் அறிவிப்பளர் வரிசை மிக முக்கியமானது. நேசகுமார் குறிப்பிடும் ஹதீஸ், ஸஹீஹ் என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு எந்த தகுதியும் அற்றது என்பதை எனது முந்திய கடிதத்தில் தெளிவு படுத்தியிருந்தேன். இது குறித்து, சகோதரர் அபூமுஹை தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.

http://abumuhai.blogspot.com/2004_12_01_abumuhai_archive.html

//முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்த எண்ணத்தை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுறுவி அறிந்தார்களா? அல்லது நபி(ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.//

இதற்கு நேசகுமாரின் பதில் என்ன?

3. நேசகுமார் கூறுகிறார், “இவ்விஷயத்தை பதிவு செய்த ஆரம்பக்கால இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக சோதித்து உண்மையென்று தம்மில் தெளிந்த பின்னரே பதிவு செய்து வைத்துவிட்டு சென்றிருக்கும் நிலையில்..”. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆதாரங்கள் நேசகுமாரின் கைவசம் இருக்கும் பட்சத்தில், இந்த நிகழ்வு ஒரு ஸஹீஹான ஹதீஸ்தான் என்று நிரூபிக்க நேசகுமாருக்கு எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை. (ஸஹீஹ் என்றால் என்ன என்பதற்க்கு எனது முந்திய பதிவைப் பார்க்கவும்) இதை அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தால் அதை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்கப் போவதில்லை. நேசகுமார் செய்வாரா?

4. நேசகுமார் மேலும் கூறுகிறார், “...இதை கட்டுக்கதை என்று கூறும் மெளதூதியோ மற்றவர்களோ அம்முடிவை, தம்முடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்மொழியும்போது, அதற்கு வேறு ஏதும் சான்று பகராதபோது, இதை எம்போன்றவர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை.” நேசகுமாரின் இந்த கூற்றும் அடிப்படையற்றதே. இதில், மதப்பிடிப்புள்ள அறிஞர்கள் இந்த நிகழ்வு நபிகளாரை அவதூறு செய்வதாலேயே இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்ற கருத்து தொனிக்கிறது. ஒரு ஹதீஸ் ஒப்புக்கொள்ளப்படுவதற்கும், ஒப்புக்கொள்ளப்படாததற்குமான அளவுகோல், முன்பே விளக்கியதுபோல், அது ஸஹீஹ் ஆனதா, அல்லவா என்பதுதானே ஒழிய அது நபிகளாரை போற்றுகிறதா, தூற்றுகிறதா என்பதல்ல. நபிகளாரை அளவுக்கு அதிகமாக போற்றும் ஒரு ஹதீஸ் (“நபியே! உம்மை படைத்திருக்காவிட்டால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்” என்று இறைவன் அறிவித்தான் என்பது) ஆதாரமற்றது என்பதால், மதப்பிடிப்புள்ள மார்க்க அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

5. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு “ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே காணக்கிடைக்கிறது என்று தீவிர மதப்பிடிப்புள்ள முஸ்லிம்களே ஒப்புக்கொள்கிறார்கள்” என்று சொல்லும் அவர், இதற்கென ‘ரஹீக்’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் அப்புத்தகத்தில் 399-400 பக்கங்களில், மேற்குறிப்பிட்ட அந்த நிகழ்வு அப்பட்டமான கட்டுக்கதை என்றும் அதை இறைவன் எவ்வாறு தெளிவு படுத்தினான் என்றும் விளக்கப் பட்டிருக்கிறது.

அந்நூலிலிருந்து குறிப்பிட்ட அந்த பகுதி:

ஜைனப் (ரழி) நபி (ஸல்) திருமண விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்கர்கள் புனைந்தனர். அதவது, முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காக தனது மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக் கதையை அவர்கள் எந்தளவு பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக்கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ் அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகிறான்.

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)

6. நேசகுமார் குறிப்பிடும் நிகழ்வு ஆதாரமற்றது என்பதற்கு மேலும் ஆதாரங்கள்:

அல்லாமா ஷபீர் அஹமது உஸ்மானி அவர்களின் ‘த•ப்ஸீரே உஸ்மானி’ எனும் குர்ஆன் விளக்கஉரை நூலில் 33-ம் அத்தியாயத்தின் அடிக்குறிப்பு ஒன்று கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “..The legends which are described by the unauthentic historians at this place are rejected by Ibne Hajar and Ibne Kathir’

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இப்னு கஸீர் (Ibne Kathir) தனது விரிவுரை நூலில் நபிகளார் - அன்னை ஜைனப் திருமணம் நிகழ்ந்த சூழ்நிலையை விரிவாக விவாதித்திருக்கிறார். நேசகுமார் குறிப்பிடும் சம்பவம் அதில் இடம்பெறாததோடு, ‘இச்சூழலில் அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்கள் ஆதாரமற்றவை (ஸஹீஹ் அல்ல) என்பதால் அவற்றை புறக்கணிப்பதே சரி’ என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

7. “இச்சம்பவம் இப்னு சாதின் தப்காத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தால், அப்போதாவது நபிகள் நாயகமும் நம்மைபோன்று அல்லது நம்மைவிட அதிகமாக ஆசாபாசங்கள் உடையவரே என்பதை சலாஹ¤தீனும் மற்ற இஸ்லாமிய அன்பர்களும் ஒப்புக்கொள்வார்களா?” என்று நேசகுமார் கேள்வி எழுப்புகிறார். நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன், ஒரு பதிவு அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம்பெற்றிருப்பதாலேயே ஆதாரபூர்வமானதாக ஆகிவிடாது. ஒரு ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது ஒப்புக்கொள்ளப்படும். நேசகுமார் தனது வாதத்தை ஸஹீஹ் ஆன ஹதீஸ்களை கொண்டு நிரூபித்தால் அதை எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதை நிரூபிக்க நேசகுமார் தயாரா?

8. “இம்மாதிரியான விவாதங்களிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் தமது மதத்தின் குறைபாடுகள் புலப்பட்டு, அது மத வெறியை தணித்தால் சமுதாயம் மிகவும் பயன்பெறும்.” என நேசகுமார் கருத்து தெரிவித்திருக்கிறார். விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர் எப்படி இந்த ஒரு முடிவுக்கு வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. விவாதம் ஒரு முடிவுக்கு வரும் சூழ்நிலையில் ‘குறைபாடுகள் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை, அதை தவறாக புரிந்து கொண்டவர்களின் செயல்பாடுகளில்தான் இருக்கிறது’ என்பதை அவர் சரியாக புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

9. மற்றபடி, நேசகுமார் இவ்வாறு விவாதம் புரிவதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே! அவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அறிவதற்காக வேண்டியாவது பல நூற்களை படிக்கிறேன். மார்க்க அறிஞர்களுடன் பேசி தெளிவு பெறுகிறேன். இஸ்லாம் ஒரு தெளிவான வாழ்க்கை வழிகாட்டி என்ற என் நம்பிக்கை இன்னும் வலுப்பெற்று வருகிறது.

- சலாஹ¤த்தீன் -

ஹதீஸ் - ஒரு சிறு விளக்கம்!

'திண்ணை' 20-01-05ல் வெளியான கட்டுரையின் மறுபதிவு..

நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்ட போது அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வை ஆதாரமாக நேசகுமார் காட்டி இருந்தது உண்மைதான். அவர் ஆதாரம் தரவில்லை என்று சொன்னது என் தவறு.
.
பொதுவாக தான் காட்டும் ஆதாரங்களுக்கு உரிய இணைய சுட்டியையோ, குர்ஆன் வசனங்கள் / ஹதீஸ் அறிவிப்புகளின் எண்களையோ, ஆசிரியர், நூல், பக்க எண், பதிப்பாளர் போன்ற விபரங்களையோ தரும் நேசகுமார், இந்த விஷயத்தில் அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் என்ற ஒரு பெயரை மட்டும்
குறிப்பிட்டிருந்தார். இந்த விபரங்களுடன் சில மார்க்க அறிஞர்களை அணுகி
விளக்கம் கேட்டபோது, அவர்கள் இந்த நூலாசிரியரை அறிந்திருந்தார்கள்.
இவர் ‘தபகாத்’ என்ற பெயரில் நூல் ஒன்று தொகுத்திருப்பதாகவும்
அறிந்திருந்தார்கள். ஆனால் இந்த நூல் மார்க்க அறிஞர்களிடையே
உபயோகப்படுத்தப்படுவதில்லை என்பதால் இந்த நூல் யாரிடமும் கைவசம் இல்லை. அதன் மூலத்தை பார்க்காமல் அவர்களால் கருத்து எதுவும் தெரிவிக்க இயலவில்லை. நேசகுமாருக்கு எப்படியோ கிடைத்திருக்கிறதே என்ற எண்ணத்தில் மனம் தளராமல் இணையத்தில் தேடியபோது... கிடைத்தே
விட்டது!. இரண்டு அல்லது மூன்று இணையத்தளங்களில் (அனைத்தும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத்தளங்கள்!) இந்த நூலை குறிப்பிட்டு, அதில் முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகின்றார்கள். அதன் ஆங்கில மூலத்தை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். நேசகுமார் இந்த சம்பவத்தை சித்தரித்த விதம்
கிட்டத்தட்ட இந்த ஆங்கில மூலத்துடன் ஒத்துப்போவதால், அவர் இந்த
இணையத்தளங்களில் கூறப்படும் கருத்துக்களையே தனது ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.
.
இச்சம்பவம் பலவிதமாய் புத்தகங்களில் காணப்படுகிறது என்று குறிப்பிடும்
நேசகுமார், இதன் நுணுக்கமான விளக்கங்களுக்கு செல்லாமல் அதன்
சாராம்சத்தையே பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
நேசகுமாரின் பார்வையில் இதன் சாராம்சம்: “ஜைனப்பை அவரது கணவன்
வெளியே சென்றிருக்கும்போது சரியானபடி ஆடை அணியாத நிலையில் பார்த்த நபிகள் நாயகத்தின் இதயம் சஞ்சலமுற்றது. இதையறிந்த அவரது (வளர்ப்பு) மகன், தாமே முன்வந்து மனைவியை விட்டுக்கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது” என்பதே.
நேசகுமார் குறிப்பிடும் அந்த நிகழ்வு அல்லது பதிவு ஒரு கட்டுக்கதையே என்பது அதை கொஞ்சம் கவனித்து படித்தாலே புரியும். அதற்கு முன் ‘ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது ‘ என்று நேசகுமார் சொல்வதால் ‘ஹதீஸ் என்றால் என்ன?’ என்பதைப்பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது இங்கு பயனளிக்கும்.
.
1) வேறு எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பாக, நபிகள் நாயகம்
அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் அனைத்தும், (அவர்களின் அந்தரங்க
வாழ்க்கை உட்பட) ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள்.
.
2) எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற
அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
a. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)
b. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
c. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
d. ளயீப் (பலவீனமானது)
இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,
நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.
.
3) ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,
.
a. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும்
நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
b. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.
c. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
d. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ
அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.
இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது.

ஹதீஸ் தொகுப்புகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, கீழ்க்கண்ட
இணையத்தளங்களை பார்வையிடலாம்.

http://www.tamililquran.com/hadeeth.asp?file=hadith_art_1.html

இஸ்லாமிய எதிர்ப்புப்பிரச்சார இணையத்தளங்களிலும், நேசகுமாராலும்
சுட்டிக்காட்டப்படும் அந்த ‘நிகழ்விற்கு’ மேலே கூறப்பட்ட ஒரு ஸஹீஹான
ஹதீஸிற்குறிய எந்த தகுதியும் இல்லை என்பது தௌ¤வாக தெரிகிறது.
.
1. இது ஒரு சம்பவத்தை பற்றி விவரிப்பதற்கு மாறாக, ஒரு கதையையே
உள்ளடக்கி இருக்கிறது. ஜைதை தேடி நபிகளார் அவர் வீட்டிற்கு செல்வதில்
தொடங்கி, ஜைது தன் மனைவியை விவாகரத்து செய்தல், ஜைனப் இத்தா
இருத்தல், நபிகளாருடன் அவரது திருமணம் தொடர்பாக இறைக்கட்டளை வருதல், நபிகளாரின் அடிமைப்பெண் இச்செய்தியை ஜைனப்பிடம் தெரிவித்து பரிசு பெறுதல் என பல சம்பவங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு இருக்கிறது.
.
2. முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர், சங்கிலித்தொடரில் முதல் அறிவிப்பாளரா அல்லது கடைசி அறிவிப்பாளரா என்ற விபரம் தெரியவில்லை. இவர் கடைசி அறிவிப்பாளர் என்றால், முதல்
அறிவிப்பாளர் யார்? இவர்தான் முதல் அறிவிப்பாளர் என்றாலும் அது
சாத்தியமில்லை. ஏனெனில் இந்த அறிவிப்பில் பல சம்பவங்கள் கலந்து
இருப்பதால், ஒருவரே இந்த சம்பவங்கள் அனைத்திலும் நேரடியாக பங்கு
பெற்றிருக்க முடியாது.
.
3. நபிகளாரை வீட்டுடையில் இருந்த ஜைனப் அவர்கள் வரவேற்றதாக
சொல்லப்படும் சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், நபிகளாரும், ஜைனப் அவர்கள் மட்டுமே. இது ஒரு ஹதீஸாக அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த இருவரில் ஒருவர்தான் முதல் அறிவிப்பாளராக (றாவீ என்று அரபியில் சொல்வார்கள்) இருந்திருக்க வேண்டும்.
.
4. ஜைனப் அவர்கள் அவசரமாக திரைச்சீலையை விலக்கி நபிகளாரை
வரவேற்றபோது, நபிகளார் அதை விரும்பினார்கள் என்று இங்கு கூறப்படுகிறது. (..so she leapt in a hurry, and the Messenger of God
liked her when she did that) இது நபிகளாரின் மனதிற்குள் தோன்றிய எண்ணமாக இருப்பதால், நபிகளார் மட்டுமே இதை அறிவித்திருக்க முடியும். மேலே கூறப்பட்ட அறிவிப்பாளரான இப்னு ஹய்யான் இதை அறிய வேறு
வழியே இல்லை.
.
இந்த நிகழ்வு கட்டுக்கதையைத்தவிர வேறில்லை என்பதற்கு, மேலும் பல
ஆதாரங்களை கூறிக்கொண்டேபோகலாம். சகோதரர் அபூமுஹையின்
வலைப்பதிவிலும் இத்தகைய ஆதாரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
மௌலானா மௌதூதி அவர்களின் குர்ஆன் தஃப்ஸீரிலும், ‘ரஹீக்’ என்னும்
நபிகளாரின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் இந்தச் சம்பவம் ஒரு கட்டுக்கதை என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும், இந்த நிகழ்வு ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ் என்பதற்கு நண்பர் நேசகுமார் வசம் ஆதாரங்கள் ஏதுமிருப்பின் தாரளமாக அவற்றை அவர் முன் வைக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களிலிருந்து அல்லாமல், அவர் நேரடியாக ‘தபகாத்’ என்னும் நூலிலிருந்தோ அதன் மொழிபெயர்ப்புகளிலிருந்தோ இந்த சம்பவத்தை எடுத்திருந்தாரென்றால், அந்த குறிப்பிட்ட பக்கங்களை தயவு செய்து scan செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அல்லது வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களிலோ, தஃப்ஸீர்களிலோ (குர்ஆன் விளக்கஉரை) இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த ஆதாரங்களை தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

========================

இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களில் காணப்படும் text
அப்படியே:

Muhammad Ibn Yahya Ibn Hayyan narrated, "The Messenger
of God came to Zaid Ibn Haritha's house seeking him.
Perhaps the Messenger of God missed him at that time,
that is why he said, 'Where is Zaid?' He went to his
house seeking him and, when he did not find him,
Zainab Bint Jahsh stood up to [meet] him in a house
dress, but the Messenger of God turned away from her.
She said, 'He is not here, Messenger of God, so please
come in; my father and mother are your ransom.' The
Messenger of God refused to come in. Zainab had
hurried to dress herself when she heard that the
Messenger of God was at her door, so she leapt in a
hurry, and the Messenger of God liked her when she did
that. He went away muttering something that was hardly
understandable but for this sentence: 'Praise be to
God who disposes the hearts.' When Zaid came back
home, she told him that the Messenger of God came.
Zaid asked, 'You asked him to come in, didn't you?'
She replied, 'I bade him to, but he refused.' He said,
'Have you heard [him say] anything?' She answered,
'When he had turned away, I heard him say something
that I could hardly understand. I heard him say,
"Praise be to God who disposes the hearts." ' Zaid
went out to the Messenger of God and said, 'O
Messenger of God, I learned that you came to my house.
Did you come in? O Messenger of God, my father and
mother are your ransom. Perhaps you liked Zainab. I
can leave her.' The Messenger of God said, 'Hold on to
your wife.' Zaid said, 'O Messenger of God, I will
leave her.' The Messenger of God said, 'Keep your
wife.' So when Zaid left her, she finished her legal
period after she had isolated herself from Zaid. While
the Messenger of God was sitting and talking with
`Aஒisha, he was taken in a trance, and when it lifted,
he smiled and said, 'Who will go to Zainab to tell her
that God wedded her to me from heaven?' The Messenger
of God recited, 'Thus you told someone whom God had
favoured and whom you yourself have favoured: "Hold on
to your wife." ' `Aஒisha said, 'I heard much about her
beauty and, moreover, about how God wedded her from
heaven, and I said, "For sure she will boast over this
with us." ' Salama, the slave of the Messenger of God,
hurried to tell her about that. She gave her some
silver jewellery that she was wearing."

இஸ்லாம் - தவறான புரிதல்களும் விரோத பிரச்சாரங்களும்!

முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடையே இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் பற்றியும் காணப்படும் தவறான கருத்துக்களுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவதாக, இஸ்லாத்தைக் குறித்தும் அதன் தாத்பர்யம், கொள்கை கோட்பாடுகளைக் குறித்தும் அவர்களுக்கு எவரும் எடுத்துச் சொல்லவில்லை; முஸ்லிம்களே சொல்ல மறந்து விட்டனர்.

இரண்டாவதாக, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்ட ஆங்கிலேயர்கள் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்து விட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது.

மூன்றாவதாக, வகுப்புவாதிகளும் பாஸிஸவாதிகளும் தொடர்ந்து இடைவிடாமல், சளைக்காமல் மேற்கொண்டு வரும் தீவிரமான முஸ்லிம் விரோதப் பிரச்சாரம்! இவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து தவறான கருத்தை வலிந்து திணித்து வருகின்றனர்.

நான்காவதாக, முஸ்லிம்களின் தவறான செயல்களே இஸ்லாத்துக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் இடையே தடுப்புச்சுவராக எழுந்து நிற்கின்றன. முஸ்லிம்கள் சரியான, உண்மையான இஸ்லாத்தை கடைப்பிடிக்கத் தவறியதும் ஒரு முக்கியமான காரணமாகும்.

இவற்றோடு ஊடகத்தின் பங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். எதிர்மறையான நிகழ்வுகளோடும், குணங்களோடும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இணைத்துச் சொல்வது ஊடகத்தினருக்கு வாடிக்கையாகிவிட்டது. போர், பயங்கரவாதம், கலவரங்கள், ஆள்கடத்தல், விமானக்கடத்தல், ஆடம்பரம், சர்வாதிகாரம், மூட நம்பிக்கை, பின் தங்கிய நிலை போன்ற எதிர்மறையான குணங்களோடுதான் முஸ்லிம்களை ஊடகம் அடையாளங்காட்டுகிறது.அது மட்டுமின்றி, வரலாற்றுப் பாடநூல்களிலேயே முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகளும் அரைகுறையான உண்மைகளும் இடம் பெற்றிருப்பதும் சின்ன வயதிலேயே தவறான கருத்துகள் வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. (1)

இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் குறித்து நிலவும் தவறான புரிதல்களை அகற்றி சரியான முறையில் உண்மை இஸ்லாத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

(1) “சத்தியப்பேரொளி” எனும் நூலிற்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதிய பதிப்புரையிலிருந்து..

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...