Wednesday, May 12, 2010

அறிவியலும் ஆன்மீகமும்!

நாத்திக அன்பர் ஒருவருடன் சமீபத்தில் நடந்த விவாதத்தின்போது, 'இறை நம்பிக்கை உடையவர்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அறிவியலுக்கு எதிரானவர்கள்.  ஆனால், நாத்திகர்களோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டவற்றை மட்டுமே ஏற்பார்கள்' என்ற ரீதியில் தன் வாதங்களை எடுத்து வைத்திருந்தார். அவரது இந்த இரண்டு வாதங்களுமே தவறு என்று எவ்வளவோ விளக்கியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

"இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மதமல்ல நண்பரே.  குர்ஆன் ஒரு அறிவியல் நூலல்ல என்றாலும், 'அத்தாட்சிகள்' என்ற முறையில் எத்தனையோ அறிவியல் உண்மைகள் அதில் சொல்லப்பட்டுள்ளன" என்றேன் நான்.

"உங்களைப் பற்றி தெரியாதா? எதையுமே குரானில் போட்டிருந்தால் ஏற்பீர்கள்.  குரானில் இல்லாவிட்டால் ஏற்க மாட்டீர்கள்.  இதில் என்ன அறிவியல் வாழுகிறது?" என்றார் அவர்.

"நண்பரே.  இஸ்லாம் பற்றி நீங்கள் தப்பும் தவறுமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.  இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் விளக்கிச் சொல்ல நான் தயார். இஸ்லாமியக் கொள்கைகள் கற்பனையானவை என நீங்கள் செதுக்கி வைத்திருக்கும் மனப்பிம்பத்தினை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து விட்டு, அந்த விளக்கங்களை தெரிந்துக் கொள்ள நீங்கள் தயாரா?"

"தேவையில்லை.  இஸ்லாம் குறித்து யார் எதிராக எழுதினாலும், அது இஸ்லாம் குறித்த போதிய விளக்கமின்மையால் எழுதப்பட்டது என்பது இஸ்லாமியர்களின் தட்டையான சிந்தனைகளில் ஒன்று. இதற்கு நீங்களும்  விதிவிலக்கல்ல. அதேபோல் குரான் கூறும் எதுவும் நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு மோதாது, அப்படி மோதியது என்றால் அது யூகமாக இருக்கும் என்பதும் உங்களின் தட்டையான சிந்தனைகளில் உள்ளது.   எனவே, உங்கள் விளக்கங்கள் தேவையில்லை.    நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல!"

அதோடு இந்த விவாதம் முடிவுக்கு வந்தது!

வேறு யாராவது இதுபோல எழுதியிருந்தார்களென்றால் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்காது.  ஆனால் இந்த நாத்திக அன்பர்  'இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே' தனது வலைத்தளத்தில் தொடர்க் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பவர்!  அடக் கடவுளே!

இஸ்லாமியர்கள் என்றால் தட்டையான சிந்தனை உள்ளவர்கள் என்று இவரே முடிவு செய்து கொள்வாராம்.  ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கை என்ன என்பதை ஒரு முஸ்லிமின் கண்ணோட்டத்தில் இவர் தெரிந்துக் கொள்ளகூட மாட்டாராம்.  ஆனால் அந்த முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கையை இவர் தகர்க்கப் போகிறாராம்.  எங்கே போய் முறையிடுவது?

'நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதற்கு இது இடமல்ல' என்று அவர் முகத்திலடிப்பதுபோலச் சொன்னாலும் நான் அதை அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை.  அவரது இன்னொரு பதிவில் விவாதத்தைத் தொடர்ந்தேன்.  அதைப் பற்றி அடுத்த பதிவில்..

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...