Wednesday, May 25, 2005

வணிகம் என்றொரு வணக்கம்!

மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழில், வணிகம், உத்தியோகம் ஆகியவை பொருளீட்ட நாம் மேற்கொள்ளும் சில வழிமுறைகள். இம்மூன்றில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கிறது. சிலவற்றில் அதிகம் கிடைக்கும். சிலவற்றில் குறிப்பிட்ட தொகையே கிடைக்கும். சிலவற்றில் சில நேரங்களில் நட்டம் கூட ஏற்படலாம். வருமானம் பெற்றுத்தரும் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் இவற்றுக்கிடையில் வேறு வித்தியாசங்கள் அதிகம் இல்லை.

ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இந்த வழிமுறைகள் எல்லாம் சமமானவை அல்ல. இஸ்லாம் இவற்றுள் பெரும்பாலானவற்றை ஆகுமாக்கி வைத்து, சிலவற்றை தடுத்திருக்கிறது. குர்ஆன் கூறுகிறது: "வணிகத்தை ஆகுமாக்கி வைத்த இறைவன் வட்டியை தடுத்து விட்டான்" (2:275). அதோடு மட்டுமல்லாது, இஸ்லாம் தொழில், வணிகம் ஆகியவற்றை வெறும் வருமானம் பெற்றுத்தரும் வழிமுறையாக மட்டும் பாராது, அதற்கும் அதிகமான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உண்மை பேசி நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர், மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்" (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) - நூல்: திர்மிதி)

இத்தகைய உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் வணிகம் என்பது வெறுமனே பொருளீட்டும் வழி மட்டுமல்லாது, அதற்கும் மேலாக சமுதாயத்திற்கு மிக பயனளிக்கும் ஒரு சேவையும் கூட என்பது தெரிகிறது. இத்தகைய உயரிய அந்தஸ்திற்கு தகுதியுடையதாக ஆக வேண்டுமென்றால் அந்த வணிகம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறைகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது.

இன்றைய சூழ்நிலையில் வணிகம் என்பது பண நிர்வாகம், பொருளாதாரம், தயாரிப்பு, சந்தைப்படுத்தல், மனிதவள மேலாண்மை, போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக, மிக சிக்கலானதாக இருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகள், கணினி போன்ற வணிக நிர்வாகத்திற்கு தேவையான துறைகள் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன. நிர்வாகிகளாக ஆக விரும்புபவர்கள் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது.

இங்கு சில கேள்விகள் எழலாம்.

(1) 14 நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்ட, அதற்குப்பின் மாற்றப்படாத இஸ்லாமிய நெறிமுறைகளும் போதனைகளும் இன்றைய காலக்கட்டதிற்கும் பொருந்துமா?

(2) வணிகம் நடத்துவதற்கு தேவையான மேற்கண்ட எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா?

(3) தொழிற்துறை நிர்வாகம் குறித்து பல்கலைக்கழகங்கள் போதிக்கும் பாடங்கள் இஸ்லாத்திற்கு ஏற்புடையானவை அல்லவா?

இந்த கேள்விகளுக்கு விடை அறிவதற்கு இஸ்லாமிய கொள்கைகள் குறித்த சில அடிப்படையான கருத்துக்களை புரிந்து கொள்வது நல்லது.

முதலாவதாக, இஸ்லாமின் கொள்கைகள் அனைத்துமே ஒரு மனிதனை நல்லொழுக்கங்களைக் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டவை. இறுதித்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நல்ல ஒழுக்கங்களை பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்." தொழுகை முதற்கொண்ட எல்லா இஸ்லாமிய கடமைகளும்கூட மனிதர்களை நல்ல ஒழுக்கத்தின்பால் இட்டுச் செல்லும் பயிற்சிகளே.

இஸ்லாம் கற்றுத்தரும் இத்தகைய நற்பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்த மனிதர், ஒரு சிறந்த வணிகராகவும் திகழ்வதில் வியப்பேதும் இல்லை. இந்த வணிகர்,
- நாணயமிக்கவராக இருப்பார்.
- பொய் சொல்ல மாட்டார். மோசடி செய்ய மாட்டார்.
- தான் தொடர்பு கொள்பவர்களுடன் மென்மையுடனும் நற்பண்புகளுடனும் நடந்து கொள்வார்.
- அளவையிலும் நிறுத்தலிலும் நேர்மையுடன் நடந்து கொள்வார்.
- தான் விற்கும் பொருளில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதை மறைக்காமல் தெளிவாக எடுத்துரைத்து விற்பார்.
- மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை பதுக்கி வைக்க மாட்டார்.

இத்தகைய வணிகருடன் வியாபாரம் செய்ய யார்தான் விரும்ப மாட்டார்கள்? வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஒரு வணிகர் தனது தொழிலில் வெற்றியடைய தடையென்ன இருக்கப் போகிறது? இஸ்லாம் சொல்லித்தரும் இந்த நெறிமுறைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டதாக இருந்தாலும் எல்லா காலக்கட்டத்திற்கும் பொருந்துபவையே!

இரண்டாவதாக, மார்க்க அறிஞர்கள் இஸ்லாமின் கொள்கைகளை ஒரு கட்டிட வரைபடத்திற்கு ஒப்பிடுகிறார்கள். வரைபடத்தை அடிப்படையாக கொண்டு கட்டிடம் எழுப்பப்படுகிறது. ஆனால் வரைபடமே கட்டிடமல்ல. அதுபோல, இஸ்லாமின் கொள்கைகள் முஸ்லிம்கள் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான ஒரு அடிப்படைத்திட்டம்.

வணிகம் நடத்துவதற்கு தேவையான எல்லா துறைகளிலும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை தந்துள்ளதா? என்ற கேள்விக்கு மௌலானா சையித் அபுல் அ'லா மௌதூதி (ரஹ்) அவர்கள் திருமறையைப்பற்றி கூறிய ஒரு கருத்து, பொருத்தமான பதிலாக இருக்கிறது. "குர்ஆன் மனிதனுக்கு வழிகாட்டுகிறது என்பதன் பொருள், இஸ்லாமிய வாழ்க்கை முறையைச் செயல்படுத்துவதற்காக வாழ்வின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அம்சம் குறித்தும் விரிவான சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் வகுத்துத் தருகிறது என்பதல்ல. மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு துறை குறித்தும் அதற்குள்ள எல்லைகளையும் வரம்புகளையும் நிர்ணயித்து, இறைவனின் விருப்பத்துக்கு இசைவாக அத்துறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்று அறிவிக்கக் கூடிய கைகாட்டிகளை ஆங்காங்கே அது ஊன்றி வைக்கிறது"

மூன்றாவதாக, நல்லொழுக்க போதனைகள் இரண்டு வகைப்படும். செய்யவேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை மட்டுமே செய்யும்படி போதிப்பது, அல்லது செய்யக்கூடாதவற்றை பட்டியலிட்டு அவற்றிலிருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்துவது ஆகியவையே அவை. இஸ்லாம் இந்த இரண்டு வகை போதனைகளை செய்திருந்தாலும், செய்யக்கூடாதவற்றை அது தெளிவாக வரையறுத்துள்ளதுபோல் செய்யவேண்டிய அனைத்து விஷயங்களையும் அது பட்டியலிடவில்லை என்றே மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர். இதன் பொருள் என்னவெனில், எவையெல்லாம் இஸ்லாமில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தடுக்கப்படவில்லையோ அத்தகைய செயல்களில் ஈடுபடுவது குற்றமல்ல என்பதே.

இதை ஒரு சிறிய உதாரணம் மூலமாக விளக்கலாம். சில நாடுகளில் வாகனமோட்டிகள் சாலைகளில் "U" போல திரும்புவதற்கு உரிய இடங்களில் அதற்கான சாலைக்குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த இடங்களில் மட்டுமே "U" போல திரும்ப முடியும். வேறு சில நாடுகளில் சாலைகளில் எங்கெல்லாம் "U" போல திரும்ப அனுமதி இல்லையோ அந்த இடங்களில் அதற்கான குறியீட்டு பலகைகள் வைத்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் "U" போல திரும்பலாம் என்பதுதான் இதன் பொருள். இஸ்லாமிய கொள்கைகள் இந்த இரண்டாம் வகையைப் போன்றவை.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாம் மனித வாழ்வுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை சொல்லித்தருவதோடு நின்று விடாமல், தனி மனிதருக்கும் சமுதாயத்திற்கும் தீமை தருபவை என விலக்கி வைக்கப்பட்டவைகளை தவிர மற்ற காரியங்களெல்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையே என்ற பரந்த கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. எனவே, இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்படாத தொழில் நிர்வாக நுணுக்கங்களை பல்கலைக்கழகங்களில் பயிலுவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்திற்கு ஏற்புடையதே!

மேலும், திருமறையும், இறைத்தூதரும் காட்டித்தந்த வழியில் தமது வணிகத்தை நடத்திவரும் ஒரு வணிகர் மனதில் இறையச்சம் எப்போதும் நிரம்பி இருக்கும். எந்த ஒரு செயலையும் துவங்குமுன் "இது இறைக்கட்டளைக்கு ஏற்புடையதா, மாற்றமானதா" என கண்டறிய அவரது மனம் விழையும். "வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை திக்ரு செய்வதைவிட்டும் (ஈமான் உள்ள) அம்மனிதர்களை திருப்பி விடா" (24:37) என்ற திருமறை வசனத்திற்கு இலக்கணமாக அவர் திகழ்வார். இந்த சூழ்நிலையில் வணிகமும் ஒரு வணக்கமாகவே ஆகிவிடுகிறது.

-----
"நம்பிக்கை" மே 2005 இதழில் வெளியான கட்டுரை..

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?' என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1. முதலில் ஒரு ஸென் கதையைப்பார்ப்போம்: ( நன்றி: கங்காவின் 'தினம் ஒரு ஸென் கதை)

"கோப்பையை காலி செய்"
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் "கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை" என்றார். அதற்கு துறவி "நீயும் இந்த கோப்பை போல் தான்", "நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்" என்றார்.

ஆக, இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?

2. விவாதத்தின் கருப்பொருள்:

இஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.

ஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

3. ஆதாரம் ப்ளீஸ்..

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், 'நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா?' என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.

'முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்' என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.

4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:

பொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

5. முகமூடிகள் ஜாக்கிரதை:

இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே! ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...