Monday, September 27, 2010

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்!

பகுதி 1 - கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய முஸ்லிம் சமுதாயமோ அந்நியர்களின் மொழி மற்றும் அதனூடாக போதிக்கப்பட்ட கல்வியையும் புறக்கணித்து வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது.

சுதந்திரப்போராட்ட வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களில் இதுபோன்ற இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணற்ற தியாகங்கள் புதையுண்டிருப்பதைக் காணலாம். "இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினார் குஷ்வந்த்சிங்.

சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் தியாக சமுதாயமான இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலையை ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால், அவலம்! முஸ்லிம்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி இருப்பது அரசியல்வாதிகளுக்கும் சமுதாயத் தலைவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், வங்கக் கடற்கரையையொட்டிய சில மாவட்டங்களைத் தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு அன்றாடம் வறுமைக் கோட்டுடன் ஒட்டி உறவாடும் வாழ்க்கைதான்! 2006-ல் ஆளூர் ஷாநவாஸ் தயாரித்த 'பிறப்புரிமை' என்ற ஆவணப்படத்தில் இந்த நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். [காண்க http://www.islamkalvi.com/media/pirappurimai/index.htm]

முஸ்லிம்களின் இந்த அவல நிலைக்கு புள்ளிவிவரங்களுடன் அரசாங்க முத்திரை பதித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது சச்சார் கமிஷன் அறிக்கை. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் முஸ்லிம்கள் இவ்வாறு பின்தங்கியிருப்பதன் முக்கிய காரணம் கல்வித்துறையில் அவர்கள் வெகுவாக பின்தங்கியிருப்பதுதான் என்று சுட்டிக் காட்டுகிறது சச்சார் அறிக்கை. முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே என அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தருகிறது அவ்வறிக்கை. மேலும், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் தலித்துகளைவிடவும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறது சச்சார் அறிக்கை.

இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.. அல்ல.. வாடுகிறார்கள். நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது. நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர். பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவிகிதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவிகிதத்தினர்தான் நிலத்திற்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திருக்கிறார்கள்.

சச்சார் அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான விஷயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதாகும். தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே! (அதில் எத்தனை பேர் இஸ்லாமிய சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது வேறு விஷயம்!) மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். விடுதலைப் போராட்டத்தில் தமது மக்கள் தொகையைவிட கூடுதலான விகிதாச்சாரத்தில் உயிர்த்தியாகம் செய்த சமுதாயத்தின் இன்றைய நிலை இது!

போதுமா புள்ளிவிவரங்கள்? இவ்வாறு இஸ்லாமிய சமுதாயம் குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுவது முதன் முறை அல்ல. 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன், 2006 சச்சார் கமிஷன், அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் என அனைத்து கமிஷன் அறிக்கைகளிலும் தவறாது இடம் பெறும் வாசகம் 'இந்திய இஸ்லாமிய சமுதாயம் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது' என்பதுதான்.

இந்த நிலையில் இஸ்லாமிய சமுதாயம் செய்ய வேண்டுவது என்ன? பின்தங்கியிருக்கும் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் என்னென்ன? இந்தப் பிரச்னைகளுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகள் என்ன?

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...

1 comment:

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...