Friday, February 11, 2005

இயற்கையின் சீற்றம்! இறை சித்தமா?

கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய தமிழ் மாத இதழான ‘நம்பிக்கை’ பிப்ரவரி 05 இதழில் வெளியான தலையங்கம்.

சுனாமி.

நமது அகராதியில் புதிதாக புகுந்துவிட்ட ஒரு சொல்.நில நடுக்கத்தால் உருவாகும் கடல் பிரளயத்தை உணர்த்தும் ஜப்பானிய வார்த்தை. உச்சரிப்பில் ஆபத்தை நுகர முடியவில்லை. அனுபவம் அவ்வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் கதிகலங்க வைக்கிறது.

இந்தியப் பெருங்கடல் வட்டத்திற்குட்பட்ட நாடுகளின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புப் பேரிடர் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆங்காங்கே மக்கள் தொடர்ந்து பட்டு வரும் அவதிகளுக்கு வரலாற்றில் முன்னுதாரணம் ஏதுமில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தில் வீசப்பட்ட அணுகுண்டுகளில் பலியான மக்கள் ஹிரோஷிமா - நாகசாகி என்ற இரு நகரங்களில் வசித்தவர்களே. அதிலும் பாதிப்பு ஒரு நாட்டின் ஒரு பகுதியைத்தான் உள்ளடக்கியது. பல நூறு அணுகுண்டுகளின் தாக்கத்தை இரு கண்டங்களின் பல நாடுகளை பேதமின்றி இந்த சுனாமி ஏற்படுத்தியுள்ளது. இப்பேரிடருக்கு விஞ்ஞான அடிப்படையில் காரணம் கூறியுள்ளனர்.

பூமி ஒரு கோள். அதன் மேல்பரப்பு குளிர்ந்துவிட்ட தட்டுகளால் ஆனது. மையம் ‘லாவா’ எனும் வெப்பக் குழம்பினாலானது. மையப்பகுதியில் வெப்பத்தினால் அழுத்தம் கூடும்போது ஏற்படும் வெடிப்பு, பூகம்பமாக - எரிமலை குமுறலாக மேல்மட்டத்திற்கு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூமியின் மேல் தகடுகள் உராய்கின்றன. அதனால், ஆழ்கடல் அலைகள் உருவெடுக்கின்றன; வெகுண்டெழுந்து ‘சுனாமி’யாக பேரழிவை ஏற்படுத்துகிறது.

இன்னொரு பார்வையில், நிகழ்ந்துள்ள பேரிடர் ஒரு சாபக்கேடு என்றும், இறைவனின் கோபப்பார்வை என்றும் சித்தரித்துள்ளனர். ‘பலா’ - தண்டனை இறக்கப்பட்டுவிட்டது என்ற விளக்கத்தையும் தந்துள்ளனர்.

‘காக்கும் கடவுளே அழிவைத்தந்துவிட்டான்’ எனும் அங்கலாய்ப்பும் சேர்ந்துள்ளது. அவநம்பிக்கையில் இறைமறுப்பும் ஒரு சாராரிடம் உருவெடுத்துள்ளது.

‘அவனின்றி ஓர் அணுவும் அசையா’ என்ற கோட்பாட்டில் இயற்கை தரும் வளங்களும் நலன்களும் அதன் சீற்றமும் துன்புறுத்தலும் இறை கட்டளைகளுக்கு உட்பட்டதே.

ஆனால் ‘இறைவன் பழிவாங்கிவிட்டான்!’ என்ற கூற்று இஸ்லாத்திற்கு உடன்பாடற்ற கொள்கை. படைக்கப்பட்ட அனைத்தும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட நியதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. பேரிடர், பெருநஷ்டம், இழப்பு ஏற்பட்டால் அவை இறையச்சத்தின் அடையாளங்களாக முஸ்லிம்கள் கருத வேண்டும். நம்பிக்கை வலுப்பெற்று, வாழ்க்கையை திருத்தி அமைக்க வகை செய்ய வேண்டும்.

அவதியுறும் மக்களின் துயர்துடைப்பிற்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. இவ்விஷயத்தில் சமுதாயப்பற்று முஸ்லிம் சமூகத்துடன் நின்று விடக்கூடாது. மனித நேயத்தின் முழு வீச்சும் முஸ்லிம்களிடம் பிரதிபலிக்க வேண்டும். இன மத பேதமின்றி உதவிகளை வாரி வழங்க வேண்டும்.

‘நம்பிக்கை’ இதழைப்பற்றி..

மலேஷிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’, கடந்த 9 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அனேகமாக, கிழக்காசிய வட்டாரத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே இஸ்லாமிய தமிழ் இதழ் இதுவாகத்தான் இருக்கும். தலையங்கம், நேர்காணல், ஆளுமை, சிந்தனைத்துளி போன்ற தலைப்புகளில் பயனுள்ள கட்டுரைகளும், சிறுகதைகள், கவிதைகளும் தாங்கி இந்த இதழ் வந்து கொண்டிருக்கிறது.

முகவரி:

Nambikkai
YPI Publication
Lot 44025, Jalan PJS 10/11
Bandar Sri Subang
46000 Petaling Jaya
Selangor Darul Ehsan
Malaysia

Tel: 6 03 5631 4802
Fax: 6 03 5632 8025


- சலாஹ¤த்தீன் - 11 பிப்ரவரி 05

5 comments:

மு. மயூரன் said...

//அவனின்றி ஓர் அணுவும் அசையா’ என்ற கோட்பாட்டில் இயற்கை தரும் வளங்களும் நலன்களும் அதன் சீற்றமும் துன்புறுத்தலும் இறை கட்டளைகளுக்கு உட்பட்டதே//

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது இறை கட்டளைக்கு எதிரான செயல்.

அவனன்றி ஓரணுவும் அசையாது.
பாதிப்பு என்பது அவனது தீர்ப்பு (கையெழுத்துவேறு வைத்து அனுப்பிய தீர்ப்பு)

அவர்கள் வருந்தவேண்டும் என்று இறைவன் தீர்ப்பளிக்கும் போது அதற்கெதிரக அவர்களுக்கு உதவ முயல்தல் மதத்தைஉம் புனித நூல்களையும் அவமதிக்கும் செயல்.

இவ்வாறு இறைவன் சித்தத்துக்கு எதிராக உதவி, போராட்டம், புரட்சி, சோஷலிசம். கம்யூனிசம், பெண்ணுரிமை என்று மனிதன் தன்பாட்டில் செயற்படுவதால் தான் இந்த அழிவெல்லாம்.

அழித்த அவனுக்கு நிவாரணமளிக்க முடியாதா என்ன?

மக்கள் வருந்தக்கூடாது என்பது இறைவன் சித்தமாக இருந்திருந்தால் சுனாமியே வந்திருக்க வாய்ப்பிலையே?

சுனாமி மீட்புப்பணி அது இதென்று இறைவனுக்கெதிராக செயற்பட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

Salahuddin said...

அன்பு மயூரன்,

அவனன்றி ஓர் அணுவும் அசையாது!

மதவேறுபாடின்றி இறைநம்பிக்கை கொண்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவம்தான் இது. சுனாமி போன்ற பேரழிவுகளும் அந்த இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன. ஆனால் அவை ஏன் நடக்கின்றன என்ற காரணத்தை நாம் அறிய மாட்டோம். இருந்தாலும் நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில், இது இறைவனின் கோபம், சாபம், தண்டனை, இறைவன் பழி வாங்கி விட்டான் என்றெல்லாம் காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காரணங்களிலெல்லாம் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை என்பதுதான் மேலே உள்ள கட்டுரையின் சாரம்.

இத்தகைய நிகழ்வுகள் இறைநம்பிக்கை கொண்டோருக்கு இறையச்சத்தை அதிகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் ‘இறைவன் இருக்கின்றான்’ என்ற நம்பிக்கையையாவது உறுதிப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது ஓவ்வொரு மனிதரின் கடமை. நாம் ஓவ்வொருவரும் நம் மனத்தில் சக மனிதர்கள் மீது அன்பு, பரிவு, பாசம், கருணை போன்ற உணர்வுகளையும், அதே சமயம், பொறாமை, கோபம், வெறி, குரோதம் போன்ற உணர்வுகளையும் கொண்டவர்களாகவே இருக்கிறோம். எந்த தருணத்தில் எத்தகைய உணர்வுகளை பயன்படுத்துகிறோம் என்பது ஒருவரை நல்லவராகவே கெட்டவராகவோ வெளிப்படுத்துகிறது

இன்னொரு கோணத்தில் பார்த்தால், பேரழிவு ஏற்பட்டது இறைவனின் நாட்டம் என்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சக மனிதர்களைக் கொண்டு நிவாரணமளிப்பதும் இறைவனின் நாட்டமே!

அன்புடன்
சலாஹ¤த்தீன்

மு. மயூரன் said...

ஈராக்மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் போர்தொடுத்து அங்குள்ள மனித உயிர்களை பலியெடுத்து நாசம் செய்யவேண்டும் என்ற இறைவனின் சித்தத்தை சிரமேற்கொண்டு புனித கடமையை முடித்த புஷ் இனையும் அவர்தம் சுற்றத்தையும் வணங்குவோம்.
புஷ் வாழ்க,
அவர்தம் இறையுணர்வு மேலும் சிறப்புப்பெறுக

Salahuddin said...

எனது முந்தைய comment-லேயே இதற்கான பதில் இருக்கிறது.

//நாம் ஓவ்வொருவரும் நம் மனத்தில் சக மனிதர்கள் மீது அன்பு, பரிவு, பாசம், கருணை போன்ற உணர்வுகளையும், அதே சமயம், பொறாமை, கோபம், வெறி, குரோதம் போன்ற உணர்வுகளையும் கொண்டவர்களாகவே இருக்கிறோம். எந்த தருணத்தில் எத்தகைய உணர்வுகளை பயன்படுத்துகிறோம் என்பது ஒருவரை நல்லவராகவே கெட்டவராகவோ வெளிப்படுத்துகிறது.//

புஷ்ஷிற்கும் அவரது சுற்றத்திற்கும்,அவர்களை வணங்குபவர்களுக்கும் கூட இது பொருந்தும்.

lalgudiyan said...

i really agree the stupid talk by george bush...its a shame...it is impossible to god speaking to human...do you know what i mean??

its suitable for jesus and Mohammed too?

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...