Wednesday, January 23, 2019

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

 கீழ்க்காணும் திருமறை வசனங்களை பார்க்கும்போது, தடுக்கப்பட்ட ஒருசிலவற்றை தவிர மற்ற உணவு வகைகள் அனைத்தையும், மாமிசம் உட்பட, இறைவன் மனிதர்களுக்கு ஆகுமானதாக ஆக்கி வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது.

5:1 முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன.

2:173 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்கியிருக்கிறான்.

6:145 (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை

23:21 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினன இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அனேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்திலிருந்து) நீங்கள் புசிக்கின்றீர்கள்.

16:4 நீங்கள் கடலிலிருந்து நய(மும் சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து வெளிப்படுத்தவும் அவன்தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்.

அசைவ உணவு சாப்பிட இஸ்லாம் அனுமதிதான் அளித்திருக்கிறதே தவிர, அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சைவ உணவை மட்டுமே உண்ணக்கூடிய ஒருவர் ஒரு நல்ல முஸ்லிமாகவும் இருக்க முடியும்.
2. மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது இயற்கைக்கு மாற்றமானது அல்ல!


இயற்கைக்கு எதிரான மனிதன் செயல்படும்போது அது அவனை தண்டிக்கவே செய்கிறது என்பது நாம் கண்கூடாக கண்டு வரும் நிதர்சனமான உண்மை.  சில ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுத்தீவனத்தில் மாட்டு எலும்புத்தூளை கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.  அந்த உணவைக் கொடுத்தால் மாடு அதிக பால் கறக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.  பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை “Mad Cow disease” என்றனர்.

இவ்வாறு நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன? ஆடு, மாடு போன்ற பிராணிகள் தாவர உண்ணிகள். இவற்றின் செரிமான அமைப்பு தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அது போலவே, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் செரிமான அமைப்பு மாமிச உணவு வகைகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘புலி பசித்தாலும் புல் தின்பதில்லை’. இந்த இயற்கை அமைப்பிற்கு மாற்றமான உணவு வகைகளை இந்த பிராணிகள் உட்கொள்ள நேர்ந்தால், Mad Cow Disease போன்ற வியாதிகளின் மூலம் இயற்கை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஆனால், மனிதன் புலால் உணவு உண்பது இயற்கைக்கு மாற்றமானதல்ல என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச உணவு, தாவர உணவு என இருவகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு, இருவகை உணவுகளையும் மனிதன் உட்கொள்ளலாம் என்பதற்கு இயற்கையே வழங்கியிருக்கும் அனுமதி.

மேலும், பிராணிகள் மற்றும் மனிதர்களின் பற்கள் அமைப்பிலும் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.  ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள், தாவர உணவு மட்டுமே உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை கொண்டிருக்கின்றன. இந்த பிராணிகள் இலை தழைகளை நன்கு மென்று உண்ண இந்த பற்கள் உதவுகின்றன. அது போல சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணிகளின் பற்கள், மாமிசத்தை கடித்து தின்பதற்கு வசதியாக கூராக அமைந்துள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே, மாமிச உணவு உண்ண வசதியாக கூரான முன்பற்களும், தாவர உணவுகளை மென்று உண்ண வசதியாக தட்டையான கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. மனிதன் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமென்பது இறைவனின் சித்தமாக இருந்தால், மனிதனுக்கு கூரிய பற்களை ஏன் படைக்க வேண்டும்?

3. பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு புலால் உண்பவர்கள் காரணமல்ல.

“ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.” என்ற ஒரு குற்றச்சாட்டு அசைவம் உண்பவர்கள் மீது சுமத்தப் படுகிறது. 

அதாவது, பல கிலோ பசுமையான தாவர இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகளே சில கிலோ மாமிச உணவாக மாறுகிறது என்ற பொருள் தொனிக்கிறது. இருக்கலாம். ஆனால் அதற்காக மனிதர்கள் மாமிச உணவு உண்பதை நிறுத்திவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போய்விடும்? 
 
* ஆடு, மாடுகள் அப்போதும் தாவர இலைகளைத்தான் உண்ணும்.
* கால்நடைகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. உணவுக்காக அவை கொல்லப்படாததால் உலகில் அவற்றின் பெருக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும்.
* சைவ உணவு மட்டுமே உண்ணும் மனிதர்களும் தாவர உணவுவகைகளுக்காக கால்நடைகளுடன் போட்டியிட வேண்டும்.
* இந்த சூழ்நிலையில் பூமியின் பசுமைக்கவசம் வெகு சீக்கிரமே காணாமல் போகும்!

அசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்!

அசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது.  கீழ்க்காணும் திருமறை வசனங்களை...